சில மனிதர்களை நாம் ஏன் நேசிக்கிறோம் என்று தெரியாது. ஆனால், கண்மூடித்தனமாக நேசிப்போம். நீண்டகால நேசிப்புக்குப் பிறகுதான், இதனால்தான் இவரை நேசித்து இருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ள முடியும்.பார்த்தவுடன் பழகலாம் என்று தோன்றுவது ஒரு ஆணுக்கு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஆணிடமும் மட்டுமல்ல; ஒரு ஆணுக்கு ஆணிடமும், பெண்ணுக்கு பெண்ணிடமும் கூட தோன்றலாம்.
ஒரு மனிதரிடம் அல்லது ஒருவரிடம் ஊருக்கே பிடிக்காத விஷயம் என்று ஒன்று இருக்கலாம். ஆனால், அந்த ஒரு சொல் மட்டுமே பிடித்த நபர்களும் இருக்கலாம். இப்படியெல்லாம் நான் சொல்லிக்கொண்டே போனால், தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.இப்படியே பல்வேறு கோணங்களில் பார்க்கப்படும் ஒரு நபர் வேறு யாருமில்லை, என் அன்பு நண்பன் சிம்புதான். எனக்கு எப்போதும் சிம்புவின் தன்னம்பிக்கையும், துணிச்சலும் பிடிக்கும். ஆனால், இதை மற்றவர்கள் வேறு விதமாகப் பார்க்கிறார்கள். அதைப்பற்றி அவரைப்போலவே நானும் கவலைப்படுவதில்லை. சிம்புவின் பலமே அந்த நம்பிக்கைத் திமிர்தான். இது பலமுறை அவரிடம் நேரிலேயே சொல்லியிருக்கிறேன்.
அப்படி நேசித்த நண்பனுக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு வந்தபோது, எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அதுவும் என் யுவன் இசையில்.
பாடலுக்கான சூழல் சொல்லப்பட்டு, மூன்று மணி நேரத்தில் எழுதியது. பாடல் பதிவானதும், நான் எதிர்பார்க்காதது, சிம்பு ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டியது.
அந்தப் பாடல் ஏற்கனவே யாரோ ஒரு கவிஞர் இரண்டு நாட்களாக எழுதி திருப்தி வராததால் எனக்கு வழங்கப்பட்டது. இந்த செய்தி பாடல் பதிவு முடிந்த பின்னரே எனக்கு தெரிய வந்தது.
அந்தப் பாடல் தான், ‘மன்மதன்’ படத்தில்,
மன்மதனே உனை
பார்க்கிறேன்
மன்மதனே உனை
ரசிக்கிறேன்
என்று தொடங்கும் பாடல். இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, இந்தப் பாடலில் இருந்துதான் தொடங்கியது. வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. படப்பிடிப்பு தொடங்கி ஒரு நாள் கழித்து, எனக்கு சிம்புவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘உடனே படப்பிடிப்பு தளத்திற்கு வா’ என்று.
ஒருவேளை, பாடலில் ஏதேனும் திருத்தம் இருக்குமோ என்று பயந்துகொண்டே சென்றேன். அங்கே என்னைப் பார்த்ததும் ஓடி வந்து வரவேற்ற சிம்பு, நேராக என்னை ஜோதிகாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார்.
நான் அப்போதுதான் ஜோதிகாவை முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். என்னைப் பார்த்ததும் இரு கைகளையும் பிடித்து குலுக்கி, ‘எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். இன்னிக்குத்தான் எனக்கு பாட்டோட அர்த்தத்தை சொன்னாங்க. வெரி வெரி சூப்பர்’ என்றதும், நான் கேட்டேன், ‘எந்த
வரி பிடித்திருக்கிறது?’ என்று.
தமிழை அப்போதுதான் கற்றுக்கொண்டிருந்த ஜோதிகா சொன்னார்,
ஒருமுறை பார்த்தால்
பலமுறை இளிக்கிறான்
என்ன விசித்திரமோ...
நண்பனே எனக்கு
காதலன் ஆனான்
அதுதான் சரித்திரமோ...
என்று பிள்ளைத் தமிழில் சொன்னபோது, என் மனம் சிறுபிள்ளையைப் போல் குதித்தது. எத்தனை அழகான ரசிகை என் கவிதைக்கு கிடைத்திருக்கிறார் என்று எண்ணும்போது, மனசுக்குள் பூ வாசம் வீசியது. தொடர்ந்து இன்னொரு வரியையும் சொன்னார்.
எனது படுக்கைஅறைக்கு
உனது பெயர் வைக்கவா?
‘என்ன அற்புதமான வரி. கலாசாரம் மீறாத காதல்’ என்றார். இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணம், அப்போதுதான் சூர்யா, ஜோதிகா காதல் மலர்ந்து கொண்டிருந்தது.
நான் சிம்புவை நினைத்து எழுதிய பாடலை, சூர்யாவை நினைத்தே ரசித்திருக்கிறார் ஜோதிகா என்பதை நினைக்கும்போது, எனக்கு இப்போதும் புன்னகை
மலர்கிறது.
நன்றி : தினகரன் வெள்ளி மலர்
You Are Here: Home» Latest Updates , snehan about str , str , str website , strworld.com , Tamil News , vellimalar , website for simbu » மன்மதனே உனை பார்க்கிறேன்...
0 comments